கேரள அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்ட உருவானது செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு!

கேரள அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்ட உருவானது செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு!
திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பாசன நீராகவும், முக்கிய குடிநீராகவும் விளங்கும் செண்பகவல்லி தடுப்பணையை, கேரள அரசின் வனத்துறை முற்றிலுமாக இடித்துவிட்டது.

 
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு செய்துள்ள இந்த அடாவடி நடவடிக்கை தமிழின பகை நோக்கம் கொண்டதாகும்.
வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி சமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமசுத்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.
இந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.
செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது. இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
செண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு தற்போது ஒட்டுமொத்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது. சட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசின் செயலற்றத் தன்மை ஒரு முகாமையான காரணமாக உள்ளது.

செண்பகவல்லி தடுப்பணையையே இல்லாததாக்கும் கேரள அரசின் இந்த சட்டமீறல் திருநெல்வேலி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கே விடப்பட்டுள்ள அறைகூவல் ஆகும்.
இதனையடுத்து, கேரள அரசின் இந்த தமிழின பகைச்செயலைக் கண்டித்தும், செண்பகவல்லி தடுப்பணையை உடனே சீரமைக்க வலியுறுத்தியும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி, எலுமிச்சை, முட்டை, மணல், வைக்கோல், மாடுகள், எண்ணெய் வகைகள் எதுவும் செல்லாமல் பொருளாதார தடை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், கடந்த 11.12.2016 அன்று நெல்லை மாவட்டம் – இராசபாளையம், கரிவலம் வந்த நல்லூரில், தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பில், உழவர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், “செண்பகவல்லி அணை உரிமை மீட்புக் குழு” என்ற புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களையும் உழவர் அமைப்புகளையும் ஒன்று திரட்டிப் போராட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் க.பாண்டியன் தலைமை வகித்தார். தோழர் த. ஞானராசு (கோமதி முத்துபுரம்) வரவேற்றார். இடையன் குளம் விவசாயிகள் சங்கம் திரு. செயக்குமார், சிவகிரி விவசாய சங்கத் தலைவர் திரு. இரத்தின வேல், இராசிங்கப்பேரி பாசன சங்கத் தலைவர் திரு. சு.பூமிநாதன், சிவகிரி கரும்பு விவசாயிகள் சங்கம் திரு. அ.மு.பழனிச்சாமி, தென்மலை விவசாயிகள் சங்கம் திரு. வீரத்தேவர், பெரும் புதூர் பஞ்சாயத்து தலைவர் திரு. இராசய்யா, தென்மலை விவசாயிகள் சங்கம் ஆசிரியர் பாப்புராசு, திரு. எம்.முருகன் (கரிவலம்), ஆசிரியர் நெடுஞ்சேரலாதன் (பாவாணர் கோட்டம், முரம்பு), சங்கரன்கோவில் திரு. இராசதுரை, தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் தோழர் மு. தமிழ்மணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன், செண்பகவல்லி நீர் உரிமை மீட்பு குறித்தும், உழவர்கள் இதில் முழுமையாக பங்கெடுத்துப் போராட வேண்டிய தேவை குறித்தும் விளக்கவுரையாற்றினார். மகளிர் ஆயம் தோழர் சந்திரா கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க, பலத்த கையொலிகளுக்கிடையே அவை நிறைவேறின. தோழர் க.இராசா நன்றி கூறினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, இராயகிரி கிளைச் செயலாளர் தோழர் தா.சொக்கையா பாண்டியன், கடையநல்லூர் வட்டப் பொறுப்பாளர் தோழர் ச.முத்துப் பாண்டியன், புளியங்குடி நகரச் செயலாளர் தோழர் மா. இசக்கி ஆடும் பெருமாள், மகளிர் ஆயம் புளியங்குடி அமைப்பாளர் தோழர் துரைச்சி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர்கள் மதுரை சிவா, தங்கப்பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. கூட்டத்தில் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டதோடு, உணர்ச்சிப் பிழம்பாய் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். செண்பகவல்லி அணை உரிமையை மீட்பதற்கான புதிய நம்பிக்கையையும் பெற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Related

செய்திகள் 1014834874649618772

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

சந்தாதாரர் ஆகுங்கள்..!!!

இணையத்தில் சந்தா செலுத்த...

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item